பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டா பெயர் மாற்ற 20 ஆயிரம் லஞ்சம்: பெண் வருவாய் ஆய்வாளரை பொறி வைத்து பிடித்த காவல் துறை. - தமிழக குரல் - பெரம்பலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 9 December 2022

பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டா பெயர் மாற்ற 20 ஆயிரம் லஞ்சம்: பெண் வருவாய் ஆய்வாளரை பொறி வைத்து பிடித்த காவல் துறை.

பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கான விண்ணப்பத்தினை பரிசீலனை செய்வதற்காக பெண்ணிடம் லஞ்சம் பெற்ற பெண் வருவாய் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.



பெரம்பலூர் மாவட்டம் அய்யலூர் குடிக்காட்டை சேர்ந்தவர் முருகானந்தம் மனைவி முத்தரசி(30). இவர் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பம் கொளக்காநத்தம் பிர்கா வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் ஆலத்தூர் தாலுகா, தேனூரைச் சேர்ந்த இந்திராணி (35) என்பவரிடம் பரிசீலனைக்காக சென்றிருக்கிறது.


அதை பரிசீலித்த இந்திராணி, பட்டா பெயர் மாற்றம் செய்ய 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்தரசி பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அவர்களின் ஆலோசனையின் பேரில் நேற்று மதியம் கொளக்காநத்தம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்குச் சென்று இந்திராணியிடம் ரூ.20 ஆயிரத்தை முத்தரசி கொடுத்துள்ளார்.


அப்போது அங்கு மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமசித்ரா, இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீஸார், வருவாய் ஆய்வாளர் இந்திராணியை கையும், களவுமான பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் பெரம்பலூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர் ஆஸ்கர் மணிவண்ணன்....

No comments:

Post a Comment

Post Top Ad