மோகன்பாபுவின் மருந்தகத்திற்கு திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, சிங்காளந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவரும், தற்போது பெரம்பலூர் சில்வர் நகரில் வசித்து வந்தவரான பிரகாஷ் (40) என்பவர் சர்க்கரை நோய் மற்றும் இதர நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவர் மோகன்பாபுவிடம் எனக்கு சென்னையில் சுபாஷ் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நன்கு தெரியும் என்றும், நான் எந்த உதவி கேட்டாலும் அவர் செய்து தருவார் என்றும், அவரிடம் பணம் கொடுத்தால் கிராம நிர்வாக அலுவலர், சுகாதார ஆய்வாளர் ஆகிய அரசு வேலைகளை வாங்கி விடலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
இதனை நம்பிய மோகன்பாபு தனக்கு சுகாதார ஆய்வாளர் வேலையையும், அவரது மனைவி சாருமதிக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலையையும் வாங்கி தருமாறு கேட்டு லட்சக்கணக்கிலான பணம் பிரகாசிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் பிரகாஷ், மோகன்பாபுவிடம் உங்களது நண்பர்களையும், எனக்கு அறிமுகப்படுத்துங்கள், அவர்களுக்கும் அரசு வேலை வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார். இதனை நம்பிய மோகன்பாபு மற்றும் அவரது மனைவி தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 26 பேரை பிரகாசிடம் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மேற்படி நபர்களிடம் அரசு வேலை வாங்கி தருகிறேன் என கூறி மொத்தம் ரூ.1 கோடியே 83 லட்சத்தை வாங்கியுள்ளார். ஆனால் பிரகாஷ் பணம் கொடுத்த யாருக்கும் அரசு வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். மேலும் அவர்கள் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் பிரகாஷ் தலைமறைவானார்.
இந்த நிலையில் மோகன்பாபுவிடம் பணம் கொடுத்த நபர்கள், அவரிடம் பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதையடுத்து மோகன்பாபு, பிரகாசை கடந்த 29-ந்தேதி சென்னை கோயம்பேட்டில் இருந்து காரில் பெரம்பலூருக்கு அழைத்து வந்து தனது வீட்டில் வைத்திருந்தார். இந்த நிலையில் பிரகாசின் உறவினர்கள் மோகன்பாபு பிரகாசை கடத்தி வீட்டில் சிறைபிடித்து வைத்திருப்பதாக பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு 100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மோகன்பாபு வீட்டிற்கு பெரம்பலூர் போலீசார் கடந்த 3-ந்தேதி சென்று பிரகாசை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் மோகன்பாபுவின் மனைவி சாருமதி கொடுத்த புகாரின் பேரில் பிரகாசை போலீசார் மோசடி வழக்கில் கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
மேலும், பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்த பெரம்பலூர் போலீசார் மோகன்பாபுவையும் கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். அவர் பிரகாசை காரில் கடத்தி வந்து வீட்டில் சிறை பிடித்து வைத்திருந்ததற்காகவும், கொடுத்த பணத்தை திருப்பி வாங்குவதற்காக பிரகாசின் நிலப்பத்திரத்தை வாங்கி வைத்திருந்ததற்காகவும் பிரகாசின் தாய் செல்வரசி (61) கொடுத்த புகாரின் பேரில் மோகன்பாபுவையும் பெரம்பலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது அரசு பணி என்பது எந்த ஒரு தனி நபராலும் வாங்கி கொடுக்க முடியாது. அனைத்து பணிகளுக்கான அறிவிப்புகளையும் சம்பந்தப்பட்ட துறையின் இணையதள முகவரியில் சரிபார்த்து கொள்ளலாம். பொதுமக்கள் இனி வரும் காலங்களில் இது போன்ற நபர்களை நம்பி தாங்கள் சேர்த்து வைத்த பணத்தை இழக்க வேண்டாம் என பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி கேட்டு கொண்டார்.
No comments:
Post a Comment