பெரம்பலூர் விளையாட்டு விடுதி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த டேக்வாண்டோ பயிற்சியாளர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். - தமிழக குரல் - பெரம்பலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 27 December 2022

பெரம்பலூர் விளையாட்டு விடுதி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த டேக்வாண்டோ பயிற்சியாளர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வீரபாண்டியன் நகரை சேர்ந்த நள மகராஜன் மகன் தர்மராஜன்(33). இவர் பெரம்பலூர் மாவட்ட அரசு விளையாட்டு விடுதியை சேர்ந்த பள்ளி சிறுமிகளுக்கு தற்காலிக டேக்வாண்டோ பயிற்சியாளராக கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார். 

இவர் தன்னிடம் பயிற்சி பெறும் பள்ளி சிறுமிகளிடம் கடந்தாண்டு நவம்பர் 1 முதல் கடந்த நவம்பர் 30ம் தேதி வரை ஓராண்டாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சட்ட நன்னடத்தை அலுவலர் கோபிநாத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த 2ம் தேதி கோபிநாத், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் ராமு, மகேஷ்வரி, ஒருங்கிணைப்பாளர் திவ்யா ஆகியோருடன் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதில் விளையாட்டு விடுதி சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளானது உறுதியானது.


இதையடுத்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கோபிநாத் கடந்த 7ம் தேதி புகார் செய்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் தர்மராஜன் மீதும், புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் தலைமறைவானார். 


இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பதுங்கியிருந்த தர்மராஜனை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலா தலைமையிலான போலீசார் பிடித்தனர். பின்னர் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை ஜனவரி 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் பெரம்பலூர் கிளை சிறையில் தர்மராஜன் அடைக்கப்பட்டார்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர் ஆஸ்கர் மணிவண்ணன்.

No comments:

Post a Comment

Post Top Ad