பெரம்பலூர் அருகே பெண் கொலை கணவரின் தம்பி கைது. - தமிழக குரல் - பெரம்பலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 2 January 2023

பெரம்பலூர் அருகே பெண் கொலை கணவரின் தம்பி கைது.


பெரம்பலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசாத்தி (வயது 35). இவர் அதே ஊரைச் சேர்ந்த முனியப்பன் என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.

திருமணம் ஆன மூன்று ஆண்டுகள் கழித்து முனியப்பன் இறந்துவிட்டதால், தனித்திருந்த ராசாத்தி நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இரண்டாவது கணவர் ராமகிருஷ்ணனும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.


இதன் பிறகு வெங்கனூரிலேயே தங்கி தனியாக வசித்து வந்த ராசாத்தி தனக்கு சொந்தமான வயலில் விவசாயம் செய்து வந்தார். சம்பவத்தன்று வயலில் வேலை செய்துவிட்டு மாலை வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது வழி மறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். விவசாயப் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் ராசாத்தி கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராசாத்தி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராசாத்தி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது குறித்து வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, ராசாத்தி அதே ஊரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரிடம் கடன் பெற்றுள்ளதாகவும், அந்தப் பணத்தை நாகராஜன் திருப்பிக் கேட்டபோது, தான் கடன் வாங்கவே இல்லை என்று ராசாத்தி கூறியதாகவும் சொல்லப்பட்டது.


இதனால் நாகராஜனை சந்தேகத்தின் பேரில் போலீசார் அழைத்து விசாரணை செய்து வந்த நிலையில், அவர் தான் கொலை செய்தார் என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், இந்த விசாரணையில், நாகராஜன் ராசாத்தியின் முதல் கணவரான முனியப்பனின் உடன் பிறந்த தம்பி என்பது தெரிய வந்துள்ளது. அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், "எனது சகோதரர் முனியப்பனை ராசாத்தி திருமணம் செய்து சில மாதங்களில் எனது அண்ணன் இறந்துபோனார். மீண்டும் ராசாத்தி நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்தார். அவரும் சில ஆண்டுகளில் இறந்துபோனார். அதன் காரணமாக ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் மீது ஜீவனாம்சம் கேட்டு ராசாத்தி வழக்குத் தொடர்ந்தார்.


அந்த வழக்குச் செலவிற்காக சுமார் ஒன்றரை லட்சம் வரை ராசாத்திக்கு பணம் கொடுத்துள்ளேன். அவருக்கு ஜீவனாம்சமாக சுமார் 10 லட்ச ரூபாய் பணம் கிடைத்தது. அதன்பிறகு நான் கொடுத்த ஒன்றரை லட்சம் பணத்தை திருப்பித் தருமாறு ராசாத்தியை பலமுறை கேட்டுப் பார்த்தும் அவர் எனக்கு பணம் தராமல் ஏமாற்றி வந்தார். சம்பவத்தன்று அவர் நிலத்தில் வேலை செய்துவிட்டு வரும்போது எதிரில் பார்த்த நான் பணம் தருமாறு கேட்டேன். அப்போதும் அவர் தரமறுத்துப் பேசினார். இதனால் கோபம் அடைந்த நான் கையில் வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தேன். எனக்குச் சேரவேண்டிய பணத்தை தர மறுத்ததால் கோபத்தின் காரணமாக ராசாத்தியை கொலை செய்தேன்" எனக் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad